முதல் ஒருநாள் போட்டி: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் ராய் 73, ஜோ ரூட் 78, ஸ்டோக்ஸ் 62 ரன்களைக் குவித்தனர்.
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது. கடைசி 7ஓவர்களில் 105 ரன்களை அள்ளியது இங்கிலாந்து.
இந்தியா வெல்ல 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள் பாண்டியா, பும்ரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக ஆடியது. கேப்டன் ஹோக்லி 122 ரன்களை குவித்தார். கேதர் ஜாதவ் 120 ரன்களை அபாரமாக அடித்தார். 48.1வது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது