Breaking News
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிகர் தவான் நீக்கம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் காயம் அடைந்த ஜோரூட், அலெக்ஸ் ஹாலெக்ஸ் ஆகியோருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ், பேர்ஸ்டோ இடம் பிடித்தனர்.

ஜாசன் ராய் 65 ரன்

முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். சாம்பில்லிங்ஸ் நிதானமாக ஆட, மறுமுனையில் ஜாசன் ராய் அடித்து ஆடினார். தொடக்க ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். சாம் பில்லிங்ஸ் 58 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 35 ரன் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோ களம் இறங்கினார். 17.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்னை எட்டியது.

அடித்து ஆடிய ஜாசன் ராய் (65 ரன், 56 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட கேப்டன் இயான் மோர்கன் 43 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 11 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோ 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா சாய்த்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் குவிப்பு வேகம் சற்று அடங்கியது.

இங்கிலாந்து 321 ரன்கள் குவிப்பு

இதைத்தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ்சுடன் இணைந்த மொயீன் அலி 2 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார். அடுத்து கிறிஸ்வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ்சுடன் கைகோர்த்தார். கடைசி கட்டத்தில் இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினார்கள். 19 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் சேர்த்த கிறிஸ்வோக்ஸ் ரன்-அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய பிளங்கெட் ( 1 ரன்) கடைசி பந்தில் ‘ரன்-அவுட்’ ஆகினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

விராட்கோலி 55 ரன்

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே (1 ரன்), லோகேஷ் ராகுல் (11 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 37 ரன்னாக இருந்தது.

அடுத்து யுவராஜ்சிங், கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தது. 19 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அரை சதத்தை கடந்த கேப்டன் விராட்கோலி 55 ரன்னிலும், கடந்த போட்டியில் சதம் அடித்த யுவராஜ்சிங் 45 ரன்னிலும், அடுத்து களம் கண்ட டோனி 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 31.4 ஓவர்களில் 173 ரன்னில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இந்திய அணி தோல்வி

6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினார்கள். இதனால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அணியின் ஸ்கோர் 45.3 ஓவர்களில் 277 ரன்னாக உயர்ந்த போது ஹர்திக் பாண்ட்யா (56 ரன், 43 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜா 10 ரன்னிலும், அஸ்வின் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய கேதர் ஜாதவ் 75 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 90 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ்வோக்ஸ் பந்து வீசினார். அந்த ஓவரை எதிர் கொண்ட கேதர் ஜாதவ் முதல் பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரப்பரப்பு பற்றி கொண்டது. அடுத்த 2 பந்துகளில் ரன் எடுக்காத அவர் 5-வது பந்தில் அவுட் ஆனார். கடைசி பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்கவில்லை.

தொடர்நாயகன் கேதர் ஜாதவ்

தோல்வி கண்டாலும் இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி கண்டது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய வீரர் கேதர் ஜாதவ் தொடர் நாயகன் விருது பெற்றார்.

இதனை அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கான்பூரில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இங்கிலாந்து

ஜாசன் ராய் (பி) ஜடேஜா 65

சாம் பில்லிங்ஸ் (சி) பும்ரா

(பி) ஜடேஜா 35

பேர்ஸ்டோ (சி) ஜடேஜா

(பி) பாண்ட்யா 56

இயான்மோர்கன் (சி) பும்ரா

(பி) பாண்ட்யா 43

ஜோஸ்பட்லர் (சி) லோகேஷ்

ராகுல் (பி) பாண்ட்யா 11

பென் ஸ்டோக்ஸ்

(நாட்-அவுட்) 57

மொயீன் அலி (சி) ஜடேஜா

(பி) பும்ரா 2

கிறிஸ்வோக்ஸ் (ரன்-அவுட்) 34

பிளங்கெட் (ரன்-அவுட்) 1

எக்ஸ்டிரா 17

மொத்தம் (50 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு) 321

விக்கெட் வீழ்ச்சி: 1-98, 2-110, 3-194, 4-212, 5-237, 6-246, 7-319, 8-321.

பந்து வீச்சு விவரம்:

புவனேஷ்வர்குமார் 8-0-56-0

ஹர்திக் பாண்ட்யா 10-1-49-3

ஜஸ்பிரித் பும்ரா 10-1-68-1

யுவராஜ்சிங் 3-0-17-0

ரவீந்திர ஜடேஜா 10-0-62-2

அஸ்வின் 9-0-60-0

இந்தியா

ரஹானே (பி) டேவிட் வில்லி 1

லோகேஷ் ராகுல் (சி) ஜோஸ்

பட்லர் (பி) ஜாக் பால் 11

விராட்கோலி (சி) ஜோஸ்பட்லர்

(பி) பென் ஸ்டோக்ஸ் 55

யுவராஜ்சிங் (சி) சாம்

பில்லிங்ஸ் (பி) பிளங்கெட் 45

டோனி (சி) ஜோஸ்பட்லர் (பி)

ஜாக் பால் 25

கேதர் ஜாதவ் (சி) சாம் பில்லிங்ஸ்

(பி) கிறிஸ் வோக்ஸ் 90

ஹர்திக் பாண்ட்யா (பி)

பென் ஸ்டோக்ஸ் 56

ரவீந்திர ஜடேஜா (சி) பேர்ஸ்டோ

(பி) கிறிஸ்வோக்ஸ் 10

அஸ்வின் (சி) கிறிஸ்வோக்ஸ்

(பி) பென் ஸ்டோக்ஸ் 1

புவனேஷ்வர்குமார்(நாட்-அவுட்) 0

ஜஸ்பிரித் பும்ரா (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 22

மொத்தம் (50 ஓவர்களில்

9 விக்கெட்டுக்கு) 316

விக்கெட் வீழ்ச்சி: 1-13, 2-37, 3-102, 4-133, 5-173, 6-277, 7-291, 8-297, 9-316.

பந்து வீச்சு விவரம்:

கிறிஸ்வோக்ஸ் 10-0-75-2

டேவிட் வில்லி 2-0-8-1

ஜாக் பால் 10-0-56-2

பிளங்கெட் 10-0-65-1

பென் ஸ்டோக்ஸ் 10-0-63-3

மொயீன் அலி 8-0-41-0

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.