புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் மரணம்?
புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரின் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் இரண்டு மாடு பிடி வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளாதாகவும் பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ”இன்று காலை புதுக்கோட்டை மட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் நான் துவங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், துரதிர்ஷ்டவசமாக 47 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது, ”ஆனால், மாடுகளுக்கு எந்த துன்புறுத்தலுக்கு நடக்கவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, இப்போட்டிகள் நடந்தது” என்று பாண்டியராஜன் குறிப்பிட்டார்.
இன்று இரண்டு உயிரிழப்புகள் நடந்ததாக கூறப்படுவது பற்றி கேட்ட போது , இது பற்றி தனக்கு உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பதாகவே தனக்கு தகவல் கிடைத்தது என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும், இன்றைய போட்டிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், முதலுதவி வசதிகளும் நன்றாவே செயல்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார்.
நன்றி : பிபிசி தமிழ்