Breaking News
ஜல்லிக்கட்டுக்காக டல்லாஸ் டவுண்டவுணில் 1500 தமிழர்கள் மாபெரும் பேரணி…. உண்ணாவிரதம்!

டல்லாஸ்(யு.எஸ்) அமெரிக்கா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் நடந்த போராட்டத்தில் 1500 தமிழர்கள் கலந்து கொண்டு மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் டல்லாஸ் டவுண்டவுண் (நகரின் மையப் பகுதி) ஃபெரிஸ் ப்ளாசா பார்க்கிலிருந்து புறப்பட்ட பேரணி, சுமார் ஒரு மைல் தூரம் நடந்து பயோனியர் ப்ளாசாவை அடைந்தது. பெரிய பதாகைகள் தாங்கியபடி குடும்பம் குடும்பமாக தமிழர்கள் பங்கேற்றனர். ஒரு இடத்தை பேரணி கடக்க 30 நிமிடத்திற்கும் மேலானது.

ஒரு நாள் உண்ணாவிரதம்

பயோனியர் ப்ளாசாவில் திரண்ட தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். பீட்டாவை தடை செய்ய வேண்டும், PCA சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக, மேக மூட்டத்துடன் கடும் குளிர் மற்றும் காற்று அடித்த போதிலும் குழந்தைகள் உட்பட பெரும்பாலோனோர் தொடந்து அங்கேயே இருந்து உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

தமிழர்களின் உறுதியைப் பார்த்தோ என்னவோ, மதியத்திற்கு பிறகு காற்று குறைந்தது. சூரியனும் வெப்பத்தைக் கொடுத்து, அங்கே குழுமியிருந்தவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தது போல் இருந்தது.

டல்லாஸ் நகர அனுமதி பெற்று இந்த பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநகர காவல்துறையினர் பேரணி மற்றும் உண்ணாவிரத திடலுக்கு பாதுகாப்பு அளித்து இருந்தனர்.

உடன் தனியார் செக்யூரிட்டி அமைப்பும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. உள்ளூர் தொலைக்காட்சியினர் வந்திருந்து பேரணி மற்றும் போராட்டத்தை ஒளிபரப்பினர்.

வாகனங்களுக்கு பார்க்கிங் மற்றும் பேரணி திடலை வழிகாட்ட டவுண்டவுண் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ‘தமிழன்டா’ டி ஷர்ட் அணிந்து சாலை சந்திப்புகளின் நின்று வழி நடத்திகொண்டிருந்தனர். மேலும் ஏனைய பணிகளுக்காகவும் திட்டமிடுதலுக்காகவும் சுமார் 100 பேர் கொண்ட குழு பணியாற்றினர்.

அனைத்து தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சாதி மத வேறுபாடின்றி தமிழ் இன உணர்வு மேலோங்கி இருந்தது. போராட்டத்திடல் மிகவும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது. தமிழகத்தில் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளை அனைவரும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர்.

கடல் பிரித்தாலும்…

‘கடல் பிரித்தாலும் தமிழ் இணைக்கும்’ என்ற பதாகைகளுடன் முழக்கங்களும் ஒலித்தன. போராட்டத்தில் பங்கேற்ற 23 வயது இலங்கை இளைஞர் ஒருவர், தான் மிகவும் சமீபத்தில்தான் அமெரிக்கா வந்ததாகவும், தமிழ் உறவுகள் பற்றியும் இந்த போராட்டம் பற்றியும் தெரிந்தவுடன் பங்கேற்க ஓடோடி வந்தததாக தெரிவித்தார்.

16 வயதிலேயே இலங்கையை விட்டு வெளியேறி, இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளைக் கடந்து தற்போது அமெரிக்கா வந்திருக்கும் தனக்கு, எங்கெங்கு சென்றாலும் தமிழ் உறவுகள் இருப்பது பெரிய பலமாக கருதுவதாகவும் கூறினார்.

அடுத்து பேசிய ஒருவர், நம் இளைஞர்களின் சக்தி, மத்திய அரசை நிர்பந்திக்க முடியும் என்று முன்னர் தெரியாமல் போய் விட்டதே. இந்த சக்தியின் மகத்துவம் தெரிந்திருந்தால், எம் இனத்தின் பேரழிவைத் தடுத்திருப்போமே என்று கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, அதைக்கேட்ட பிறகு அனைவரும் உணர்ச்சியமானது தெரிந்தது, சற்று நேரம் அங்கு பெரும் அமைதி நிலவியது.

மத்திய அரசே …PCA சட்டத்தை திருத்தம் செய்..

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள, அமெரிக்க ஜல்லிக்கட்டு போரட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன், ரிச்மண்ட் நகரிலிருந்து விமானம் மூலம் வந்திருந்தார். அவர் பேசுகையில், PCA சட்டத்த்தை திருத்தி, காளைகளை காட்சி விலங்குப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.

Animal Welfare Board of India வுக்கும் பீட்டா, ப்ளூக்ராஸ் ஏனைய விலங்குகள் பராமரிப்பு சார்ந்த தன்னார்வ அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி சி.பி.ஐ விசாரணை வேண்டும் இந்த அமைப்புகளுக்கு வரும் பணம், மற்றும் செலவீனங்களை ஆய்வு செய்து பொது அறிக்கை வெளியிட வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த தமிழக விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையான கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் உதவி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்கத் தமிழர்கள் அனைவரும் இந்த கோரிக்கைகளுக்கு தங்கள் தொகுதி எம்பி,

எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்

கொண்டார்.

தாத்தா பாட்டி முதல் பேரன் பேத்தி வரை

போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களில் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் ஏராளம் இருந்தனர். தங்கள் குடும்பங்களில் காளைகளையும் பசுக்களையும் குடும்ப உறுப்பினர்களாக நினைவு கூர்ந்த அவர்கள் பேசும் போது கண் கலங்கி விட்டனர்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த பெற்றோர்கள் பலரும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு இளைஞர் எழுச்சியைப் பார்த்ததில்லை. தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்று வருந்தினோம்.

இங்கு தமிழ் உணர்வுடன் திரண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைப் பார்த்து மிகவும் உணர்ச்சிப் பெருக்கில் மகிழ்ச்சி அடைந்தோம் என்றனர்.

கடல் கடந்தும் வாழும் தமிழர்களின் இன உணர்வு பிரமிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

பாட்டி ஒருவர் பேசும் போது, தமிழர்கள் தூங்கி விட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கு.. நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். எங்கள் இளைஞர்களின் எழுச்சி எங்களை இனி விழிப்புடன் வைத்திருக்கும் என்றார்.

குழந்தைகளும் பெற்றோர்களுடன் வந்திருந்து நாள் முழுவதும் இந்த இன உணர்வுப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செய்தனர். பதின்ம வயது மற்றும் கல்லூரியில் படிக்கும் அமெரிக்க தமிழ் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழில் வேகமாகப் பேச முடியாத சில இளைஞர்கள், ஆங்கிலத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசியது ஆச்சரியமூட்டியது. தங்கள் பெற்றோர்கள் மூலம் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர்களின் பிரச்சனைகளை அவர்கள் ஆழமாக தெரிந்திருப்பது வரவேற்க்கத் தக்க ஒன்றாகும்.

இது ஆரம்பம்.. தமிழக உறவுகளுக்காக போராட்டம் தொடரும்…

உண்ணாவிரதத்தை முடித்து வைத்த போராட்டக் குழுவினர், டல்லாஸில் இத்தனை தமிழர்கள் குறைந்த கால அவகாசத்தில் திரண்டு வந்திருப்பதற்கு நன்றி கூறினார்கள். மாபெரும் எழுச்சிப் பேரணிக்காக, கடும் குளிரையும் காற்றையும் பொருட்படுத்தாமல், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கே டவுண்டவுண் வரைக்கும் வந்திருப்பது, தமிழ் இன உணர்வைக் காட்டுகிறது.

ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய இந்த போராட்டம், தமிழர் நலன்களுக்காக தொடர வேண்டும்..

ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். நம் தமிழ இன உறவுகளுக்கு நம்முடைய தொடர் ஆதரவை வழங்குவோம் என்று கூறினார்கள்.

டல்லாஸ் டவுண்டவுண் முழுவதும் ‘ தமிழன் டா’ என்ற டிஷர்ட் களுடன் பவனி வந்த

தமிழர்களால், நாள் முழுவதும் அங்கே தமிழக சூழல் நிலவியது. பேரணி, உண்ணாவிரத திடலைக் கடந்து சென்ற பல அமெரிக்கர்கள் என்னவென்று கேட்டுச் சென்றனர். காளைகளுக்காக ஒரு போராட்டமா என்ற ஆச்சரியத்தை எழுப்பினர். காளைகள் வீட்டு உறவுகள் என்பதையும் தமிழர் பாரம்பரியத்தையும் அவர்களுக்கு நம்மவர்கள் புரிய வைத்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு பேரணி நடத்தி, ஒரு நாள் முழுவதும் போராட்டம் நடத்தியிருப்பது, அமெரிக்கத் தமிழர் வரலாற்றிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .

முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா முழுவதும் தமிழ் இன உணர்வு மேலோங்கி இருப்பது சமீபத்திய போராட்டங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நன்றி : ஒன்இந்தியா.காம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.