12 நாடுகள் இடையே ஏற்பட்ட பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்
அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ‘டி.பி.பி.’ என்னும் பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பு செய்யக்கூடியதாகும்.
இந்த ஒப்பந்தம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆசிய கொள்கையின் அச்சாணியாக விளங்கியது. ஆனாலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்று அங்கீகரிக்கப்படாமல் இருந்து வந்தது.
டிரம்ப் எதிர்ப்பு
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, டொனால்டு டிரம்ப் பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக சாடி வந்தார். அப்போது அவர், “நமது நாட்டை பேரழிவுக்கு வழிநடத்தும் வலிமையை கொண்டுள்ளது, இந்த ஒப்பந்தம்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
கையெழுத்திட்டார்
அதன்படி நேற்று முன்தினம் அவர் பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ள இந்தக் காரியம், அமெரிக்க தொழிலாளர்களுக்காக நாம் செய்துள்ள மிகப்பெரிய காரியம்” என குறிப்பிட்டார். பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறபோது, அது உள்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களையும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்க உதவியாக இருக்கும் என்பது டிரம்பின் நம்பிக்கை.
ஜனநாயக கட்சி எம்.பி. வரவேற்பு
அவரது நடவடிக்கையை ஜனநாயக கட்சி எம்.பி., பெர்னீ சாண்டர்ஸ் வரவேற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இடம் பெற்றிருந்த பெர்னீ சாண்டர்ஸ் இதுபற்றி பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் இது போன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன, லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பறித்துள்ளன” என குறிப்பிட்டார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்று, அலுவலகத்தில் முதல் நாளில் நிறைவேற்றப்போவதாக டிரம்ப் கூறிய பலவற்றை அவர் செய்யவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் அவர் தொழில் அதிபர்களுக்கு சாதகமான ஒரு வாக்குறுதியை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னை சந்தித்த தொழில் அதிபர்களிடம் பெருநிறுவனங்களுக்கான வரியை தற்போதைய 35 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 அல்லது 20 சதவீத அளவுக்கு குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி : தினத்தந்தி