எந்திரன் 2-ம் பாகத்தில் “ரஜினிகாந்துடன் நடிக்க சண்டை பயிற்சி கற்றேன்” நடிகை எமிஜாக்சன் பேட்டி
மதராசபட்டினம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான எமிஜாக்சன், தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் ஜோடியாக எந்திரன் இரண்டாம் பாகமாக தயாராகும் 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
எமிஜாக்சன் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது 15 வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்தேன். அழகி போட்டிகளில் பங்கேற்றும் பரிசுகள் வென்றேன். அப்போதுதான் இயக்குனர் விஜய் என்னை அடையாளம் கண்டு அவருடைய மதராசபட்டினம் படத்தில் அறிமுகம் செய்தார்.
சினிமா நெருக்கடி
ஆரம்பத்தில் மொழி தெரியாமல் கஷ்டமாக இருந்தது. எனது தோழிகள் லண்டனில் விருந்து, கொண்டாட்டம் என்று இருந்தபோது நான் சென்னையில் ஓட்டலில் தங்கி தமிழ் மொழியை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது எனக்கு தமிழ் தெரியும். சிறு வயதிலேயே மாடலிங் என்று வெளிநாடுகளில் சுற்றியதால் சினிமா நெருக்கடிகள் கஷ்டமாக தெரியவில்லை.
தற்போது இந்தியும் கற்று விட்டேன். வெளிநாட்டில் இருந்து வந்த என்னை தமிழ் ரசிகர்களும் மற்ற மொழி ரசிகர்களும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிகாந்துடன் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 2.0 அதிரடி கதை. இதில் நடிப்பதற்காக சண்டை பயிற்சிகள் கற்றேன்.
யோகா-தியானம்
இதற்காக உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றினேன். காய்கறி, பழங்களையே சாப்பிட்டேன். முட்டை, இறைச்சி வகைகளை ஒதுக்கினேன். தற்போது யோகாவும் கற்கிறேன். தியானமும் செய்கிறேன். உடல் அழகை பாதுகாக்கவும் அக்கறை எடுக்கிறேன். கனவு இல்லாமல் ஒரு நாளைக்கூட கழிக்க கூடாது என்பதை என் வாழ்நாள் மந்திரமாக வைத்து இருக்கிறேன்.”
இவ்வாறு எமிஜாக்சன் கூறினார்.
நன்றி : தினத்தந்தி