காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி: பலர் மாயம்; தேடுதல் பணி தீவிரம்
காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரது நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேற்று மாலை குரேஸ் பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பனிச் சரிவில் புதையுண்டவர்களில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 3 ராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
அதேபோல் குரேஸ் பகுதியில் மற்றுமொரு இடத்தில் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்று பனிச்சரிவில் சிக்கிக் கொண்டது. அந்த வாகனத்தில் இருந்தவர்களில் 3 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். வாகனத்திலிருந்த மேலும் பலரைக் காணவில்லை. அந்த வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற முழுவிவரம் இல்லை” என்றார்.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) காலை, மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், சோனாமார்க் என்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த ராணுவ முகாம் சேதம் அடைந்தது. இதில் ராணுவப் பள்ளியில் பணிபுரியும் மேஜர் அமித் பனிச்சரிவில் புதைந்து உயிரிழந்தார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் மற்றொரு பனிச்சரிவு சம்பவம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகில் உள்ள குரேஸ் பகுதியில் நிகழ்ந்தது. இப்பகுதியில் உள்ள படூகம் என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை பனிக்கட்டிகள் சரிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.
கடந்த இரண்டு நாட்களில் காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி பலியோனோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்