சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பொதுமக்களுக்கு நன்றி
கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய உரிமை போராட்டமாக இருந்த ஜல்லிக்கட்டிற்கு முழு உரிமை கிடைத்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இந்த முழு உரிமையை பெற்றுத்தருவதற்கு முழு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கும், அவரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு துரிதமாக செயல்பட்ட தமிழக முதல்–அமைச்சருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க வேண்டும் என்ற இந்த உரிமை போராட்டத்தில் உண்மையான உணர்வுடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆனால் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே நான் கூறினேன், போராட்டத்திற்குள் விரும்பத்தகாத தீய சக்திகள் நுழைந்துள்ளது. இதற்கு தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இதில் இடையில் வந்து சேர்ந்துள்ளனர் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நடவடிக்கை, மத்திய, மாநில அரசுக்கு எதிரான கோஷங்கள், தோற்றம் போன்றவை தெளிவாக காண்பித்தன.
தீவிர நடவடிக்கை
மாணவர்கள் பகுத்து பார்க்கும் தன்மையில் இருந்திருக்க மாட்டார்கள். காவல்துறை பொறுமை காத்தனர். ஆனால் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் விட்டுவிட்டனர். அது முறையற்றது.
மாணவர்களின் போராட்டம் தடியடி அளவிற்கு எப்படி சென்றது. இதன் பின்னணி என்ன? அரசாங்கமா? காவல்துறையா?, மாணவர்களா? அல்லது பயங்கரவாத சக்திகள் என கூறுவதா?.
வாகனங்களை காவல்துறையினர் எரிப்பது போன்ற பல காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. காக்கி உடையில் காவல்துறையினர் மட்டும் இருந்தனரா? மற்ற சக்திகள் இருந்ததா?. இருந்தால் காவல்துறை ஏன் கண்டு கொள்ளலாமல் இருந்தனர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்கள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும். நம்பி களத்தில் இறங்கிய மக்களுக்கும், மாணவர் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்த கூடியதாகும். மாணவர்கள் போர்வையில் முகமூடி அணிந்து கொண்டு கலவரத்தை உருவாக்கினால் அவர்கள் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னணியில் தி.மு.க.
இந்த வன்முறையின் பின்னணியில் சில கட்சிக்காரர்கள் சர்வ நிச்சயமாக இருக்கின்றனர். தி.மு.க.வினர் இதில் ஊடுருவி இருப்பதாக பல வலைதளங்களில் காண்பிக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு நான் கூற விரும்புவது, மாணவர்களுக்கு ஆபத்து வரும்போது, குழந்தைகளுக்கு ஆபத்து, மாநிலத்திற்கு ஆபத்து. சிலர் தூண்டிவிடுவது போல் பேசுகின்றனர். மத்தியில் பிரச்சினை என்றால் அனைத்து கட்சியும் ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பகைமையை மறந்து இந்த மக்களுக்காக பாடுபடுகின்றனரோ அன்றுதான் தமிழகம் உருப்பட முடியும் என்பது வேறு விஷயம்.
இதற்கு முன்னர் தி.மு.க.வின் பல்வேறு அறிக்கைகளை பார்த்துள்ளோம். தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுபாடு உடைய தொண்டர்களே பஸ்களை எரித்து விடாதீர்கள், கம்பெடுத்து அடித்து விடாதீர்கள் போன்ற அறிக்கையை பார்த்துள்ளோம். இந்த மாநிலத்திற்குள் காளை காட்சி பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. மாணவர்கள் 6 நாட்கள் போராட்டத்தை நடத்தினர். பிறகு பயங்கரவாதிகள் முகாமை நடத்தி மாணவர்களையும், பெற்றோர்களையும் அரணாக பயன்படுத்திக்கொண்டனர். மாணவர்களின் வாயில் வர முடியாத வார்த்தையை, எழுதி கழுத்தில் போட்டுக்கொண்டு நின்றால் அவர்கள் பயங்கரவாதிகள். தவறான தீய சக்திகள் நல்லவர்கள் போர்வையில் இருந்து கொண்டு செயல்படுவார்கள்.
நன்றி : தினத்தந்தி