ஜல்லிக்கட்டு போராட்டம், டெல்லி பயணம், அவசரச் சட்டம்: ஓபிஎஸ்-க்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமும், அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளன.
முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) முதல்வராகப் பதவியேற்றார்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 31-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக வேண்டும் என அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வெளிப்படையாக பேசத் தொடங்கினர்.
மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை, ”கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒருவரிடம் இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கு நல்லது. எனவே, உடனடியாக சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும்” என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்.
இதனால், எந்த நேரத்திலும் சசிகலா முதல்வராக பதவியேற்கலாம் என செய்திகள் வெளியாகின. இதனால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிகாரம் இல்லாத முதல்வர் என்ற விமர்சனம் எழுந்தது.
முதல்வராக பதவியேற்றதும் முதல் முறையாக கடந்த டிசம்பர் 19-ம் தேதி டெல்லி சென்ற பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது உடன் சென்ற மு.தம்பிதுரைக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதன் மூலம் பன்னீர்செல்வம் தனது அரசியல் எதிரிகளை எதிர்கொள்ளத் தொடங்கி விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், வார்தா புயலின்போது அதிரடியாக செயல்பட்டு மக்களை நேரடியாக சந்தித்த பன்னீர்செல்வம், கிருஷ்ணா நதிநீரைப் பெறுவதற்காக விஜயவாடா சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். வெறும் கடிதம் எழுதுவதோடு நின்று விடாமல் நேரில் சந்தித்தது அவரது செல்வாக்கை உயர்த்தியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் நடந்து வந்த போராட்டம் கடந்த 17-ம் தேதி முதல் தீவிரமாகியது. சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது.
போராட்டம் தீவிரமானதும் களத்தில் இறங்கிய பன்னீர்செல்வம், கடந்த 19-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறையிடம் அளிக்கும்வரை அவர் டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறை, சட்டம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஒரே நாளில் கிடைத்தது. இதனால் 20-ம் தேதியே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை மாணவர்கள் திரும்பப் பெறவில்லை. அலங்காநல்லூரில் முதல்வர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டாலும் போட்டியை நடத்த முடியவில்லை. போராட்டங்களும் ஓயவில்லை. ஆனாலும் மனம் தளராமல் சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் விளைவாக கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்ததும், மாலையில் பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் பன்னீர்செல்வம் மேற்கொண்ட இந்த தொடர் நடவடிக்கைகளினால், ஒரு வாரம் தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் காவல்துறை தடியடி நடத்தியதும், வன்முறை நடந்ததும் கரும்புள்ளியாக அமைந்தது. ஆனாலும், மாணவர்களின் போராட்டத்துக்கு 6 நாட்கள் அரசும், காவல் துறையும் ஒத்துழைப்பு அளித்தது முதல்வர் பன்னீர்செல்வம் மீதான செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.
கடந்த வாரமே சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என செய்திகள் வெளியானது. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டமும், ஓபிஎஸ் எடுத்த தொடர் நடவடிக்கைகளாலும் சசிகலா பதவியேற்பது மேலும் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மாணவர்களின் போராட்டத்தினால் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரைக்கும் அதிமுக எம்.பி.க்களுக்கும் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்காத நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உடனடியாக அனுமதி கிடைத்தது. இதற்கு முதல்வரின் அணுகுமுறையும், செல்வாக்குமே காரணம் எனக் கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பொதுவாழ்வில் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.விமர்சனங்களை தாங்கும் மனவலிமையை அண்ணா எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்’’ என்றார். அவரது இந்த மென்மையான அணுகுமுறை அவரது மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது
ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்தாலும் கடந்த இரு வாரங்களில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள், அவர் மக்கள் தலைவராக மாறி வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாடுபிடி வீரர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் கடந்த 18-ம் தேதி முதல்வரை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம், தான் வளர்க்கும் 4 ஜல்லிக்கட்டு காளை மாடுகளை முதல்வர் காட்டியுள்ளார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், ”நானும் மாடுபிடி வீரர்தான். அந்த ஆர்வத்தில் இப்போதும் காளைகளை வளர்த்து வருகிறேன்” என கூறியுள்ளார்! இதனால் ஆச்சரியமடைந்த மாணவர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
நன்றி : தி இந்து தமிழ்