ட்ரம்ப் குடியுரிமைக் கொள்கை: ஒபாமா விமர்சனம்
தனிநபரின் மத நம்பிக்கை அடிப்படையில் தடை விதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்ரம்ப்பின் குடியுரிமைக் கொள்கையை ஒபாமா விமர்சித்துள்ளார்.
சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் விதித்த தடைகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “தனி நபரின் மத நம்பிக்கை அடிப்படையில் விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவி காலம் முடிந்த பத்தாவது நாளில் ஒபாமா சார்பில் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஒபாமாவின் அறிக்கை குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கெவின் லிவிஸ் கூறும்போது, “ட்ரம்பின் குடியுரிமைக் கொள்கைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் ஒபாமாவை ஆறுதல் அடையச் செய்துள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. ஜனநாயகக் கடமையை ஒவ்வொரு நாளும் ஆற்ற வேண்டும் என்று ஒபாமா அதிபராக தனது இறுதி உரையில் கூறினார்.
குடிமக்கள் அனைவரும் ஒன்றாக ஒருங்கிணைந்து எழுப்பும் குரல் அவர்களது உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களுக்கு கேட்க வேண்டும்” என்றார்.
ஒபாமா அதிபராக பதவி வகித்த கடந்த எட்டாண்டுகளில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஒபாமாவின் நடவடிக்கைகள் குறித்து எந்த விமர்சனமும், அரசியல் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
ஆனால் ஒபாமா பதவிக் காலம் முடிந்து சில தினங்களிலேயே அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை குறித்து விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.