Breaking News
விராட் கோலியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை; ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிப்பதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமான் கூறினார்.

ஆஸ்திரேலிய அணி வருகை
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிக்ள இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23–ந்தேதி புனேயில் தொடங்குகிறது. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. உள்ளூரில் கடைசியாக ஆடிய 19 டெஸ்டுகளில் இந்திய அணி தோற்றதில்லை.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கடந்த 47 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஒரே ஒரு முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. 2004–ம் ஆண்டில் டேமியன் மார்ட்டின் (444 ரன்), மைக்கேல் கிளார்க் (400 ரன்), மேத்யூ ஹைடன் (244 ரன்) ஆகியோரின் மிரட்டலான பேட்டிங்கின் உதவியுடன் ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. மெக்ராத், வார்னே, கில்லெஸ்பி ஆகிய பவுலர்களும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

அதன் பிறகு வரிசையாக ஆஸ்திரேலியாவுக்கு தோல்விகளே பரிசாக கிடைத்தன. 2008, 2010–ம் ஆண்டுகளில் 0–2 என்ற கணக்கிலும், 2013–ம் ஆண்டில் 0–4 என்ற கணக்கிலும் இந்தியாவில் படுதோல்வி அடைந்தது.

இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு வருகை தரும் ஆஸ்திரேலியாவுக்கு, இந்த முறை இந்திய கேப்டன் விராட் கோலி தான் அச்சுறுத்தும் வீரராக விளங்குவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மொத்தம் 655 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை பெற்றார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி இருக்கும் 28 வயதான விராட் கோலி 6 சதங்கள் உள்பட 1,276 ரன்கள் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லீமான் பேட்டி
இந்திய தொடர் குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் நேற்று சிட்னியில் அளித்த பரபரப்பான பேட்டி வருமாறு:–

இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது எப்படி? அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவது எப்படி? என்பதை கண்டறிய அவரது பேட்டிங் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை எங்களது வீரர்கள் பார்த்து ஆராய்ந்து வருகிறார்கள். ஆனாலும் அவரை சமாளிப்பதற்குரிய சரியான யுக்தியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நன்றாக பந்து வீசினால் மட்டும் போதாது, அவரது விக்கெட்டை வீழ்த்த கொஞ்சம் அதிர்ஷ்டத்தின் துணையும் வேண்டும்.

எங்களை பொறுத்தவரை அவருக்கு எதிராக சில குறிப்பிட்ட திட்டங்களுடன் தான் இறங்குவோம். ஆனால் அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது ஆடுகளத் தன்மையையும், ஆட்டத்தின் போக்கையும் சார்ந்த வி‌ஷயம். எது எப்படியோ இறுதியில் நாங்கள் போதுமான அளவுக்கு நேர்த்தியான பந்துவீச்சு தாக்குதலை தொடுத்திருக்க வேண்டும். அது தான் எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள சவாலாகும். விராட் கோலியை, நாங்கள் எண்ணியபடி பேட்டிங் செய்ய தூண்டும் வகையில் எங்களது பந்து வீச்சு அமைய வேண்டும்.

2004–ம் ஆண்டு தொடர் போன்று…
இந்திய அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய திறமை எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது. மேலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்வார். எனவே 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்று நாங்கள் பயப்பட்டு கொண்டிருக்கவில்லை. களம் இறங்கி கணிசமான ரன்கள் குவித்து, எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், அவ்வளவு தான்.

2004–ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது மறக்க முடியாத வி‌ஷயம். அது போன்று வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த தொடரில் மார்ட்டின், தொடக்க வீரர் ஹைடன் போன்றோர் அபாரமாக விளையாடினர். மார்ட்டின் அல்லது ஹைடன் போன்று யாராவது ஒருவர் இந்த தொடரில் அசத்தினால் போதும். எங்களது திட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடுவோம். நிச்சயம் அவர்கள் போன்று ஆடுவார்கள் என்று நம்புகிறேன். நிலைத்து நின்று ரன்கள் சேகரிப்பது தான் எங்களது வீரர்களுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும். இவ்வாறு லீமான் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.