Breaking News
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்:எம்.எல்.ஏ.க்களை மீண்டும் சந்தித்து பேசினார்,சசிகலா

அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் காபந்து முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

கவர்னரின் முடிவு எப்போது?

இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனால், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. சசிகலாவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தும், ஆட்சி அமைக்க அவரை அழைக்காமல் கவர்னர் தாமதப்படுத்துவதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதனால் கவர்னர் எப்போது முடிவு எடுப்பார்? என்ன முடிவு எடுப்பார்? என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

சசிகலா மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரத்தை பலப்படுத்தி வருகின்றனர். சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு ஏராளமானோர் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொன்னையன் உள்பட மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தனர்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் (மேல்- சபை), அசோக்குமார் (கிருஷ்ணகிரி), சுந்தரம் (நாமக்கல்), சத்யபாமா (திருப்பூர்), வனரோஜா (திருவண்ணாமலை) ஆகிய 5 எம்.பி.க்களும், மாணிக்கம் (சோழவந்தான் தொகுதி), ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), மனோரஞ்சிதம் (ஊத்துக்கோட்டை), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), மனோகரன் (வாசுதேவநல்லூர்), க.பாண்டியராஜன் (ஆவடி தொகுதி, அமைச்சர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களும் அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று அவரது இல்லத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி), செங்குட்டுவன் (வேலூர்), மருதைராஜா (பெரம்பலூர்), பார்த் திபன் (தேனி), எம்.ராஜேந்திரன் (மேல்-சபை), லட்சுமணன் (மேல்-சபை) ஆகிய மேலும் 6 எம்.பி.க்கள் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இவர்களையும் சேர்த்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க் களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து இருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், பூனாட்சி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா, முன்னாள் எம்.பி., பெருமாள் சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி ரங்க ராஜன், பழனிச்சாமி, பிரின்ஸ் தங்கவேல், ரத்தினவேல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து ஆதரவு அளித்தனர்.

நடிகர்கள் இணைந்தனர்

எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாளின் சகோதரி மகன் திலிப் என்கிற ராமச்சந்திரன், நடிகர்கள் ராமராஜன், தியாகு, மனோபாலா, விக்னேஷ், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி, தேனி மாவட்ட போலீஸ்காரர் வேல்முருகன், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் உள்ளிட்டோரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு

இதற்கிடையே, கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய பொதுச் செயலாளர் சசிகலா, நேற்று மீண்டும் அங்கு சென்று அவர்களை சந்தித்தார்.

இதற்காக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து நேற்று மாலை 3.25 மணிக்கு காரில் புறப்பட்ட அவர், மாலை 4.50 மணிக்கு அங்கு போய்ச் சேர்ந்தார். கூவத்தூர் எல்லையில் பொதுமக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நம்பிக்கை

பின்னர் சொகுசு விடுதிக்கு சென்ற சசிகலா அங்கு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய அவர், பதவி ஏற்க அழைப்பு விடுப்பதற்கான நல்ல முடிவை கவர்னர் விரைவில் எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதுவரை பொறுமை காத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த வி.கே.சசிகலா, பின்னர் அங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டார்.

கூவத்தூர் சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் 94 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், கல்பாக்கம் அருகே பூந்தண்டலத்தில் உள்ள சொகுசு விடுதியில் 19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்துள்ளனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒருசிலர் வெளியே இருந்ததால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கூவத்தூர் சொகுசு விடுதிக்கு சசிகலா சென்றபோது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 பேர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

மோதல்

கூவத்தூர் சொகுசு விடுதியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, ஊடகத்தினர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால், ஊடகத்தினருக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.