Breaking News
பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு

மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவரது உறவினர்கள் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட் டோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக அவரது உறவினரும் அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான‌ டி.டி.வி.தினகரன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பரப்பன அக்ரஹாராவுக்கு காரில் வந்தார். அவருடன் சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டோர் இருந்தனர். தினகரனின் வாகனத்தைக் காவலர்கள் சோதனை நடத்திய பிறகு கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி அவர்களை சிறைக்குள் அழைத்து சென்றார். இது தொடர்பாக சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு இளவரசியுடன் சசிகலா பார்வையாளர் அறைக்கு வந்தார்.

சசிகலாவை பார்த்ததும் தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட உறவினர்கள் கண் கலங்கினர். அப்போது சசிகலா, தினகரனுடன் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அரங்கேறிய அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவாக உரையாடினார். சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் வெளியான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.

மறு ஆய்வு மனு?

மறு ஆய்வு மனுவை எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக விவாதித்தார். மேலும் இவ்வழக்கில் ஃபாலி நாரிமன், சேகர் நாப்டே, கே.டி.எஸ். துள்சி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என சசிகலா ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

இதனிடையே பெங்களூரு சிறையில் கட்டுப்பாடுகள் அதிக மாகவும், வசதிகள் குறைவாகவும் இருப்பதால் தமிழக சிறைக்கு மாற்ற கோரலாமா? இந்த மனுவால் சொத்துக்குவிப்பு வழக்கின் போக்கில் ஏதேனும் பிரச்சினை வருமா என சட்ட நிபுணர்களிடம் விவாதியுங்கள் என‌ சசிகலா கூறியதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் கட்சியிலும், ஆட்சியிலும் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சசிகலா தினகரனுக்கு சில ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.

இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட மற்றவர்கள் சசிகலா, இளவரசியிடம் உடல் நிலை குறித்து விசாரித்து கவலை தெரிவித் துள்ளனர். மேலும் சசிகலாவுக்கு தேவையான பழங்கள், பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளையும் வழங்கியுள்ளனர். சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது சசிகலா பல்வேறு விவகாரங்களை மிகவும் உருக்கமாக பேசியதாக தெரிகிறது.

இன்று முதல்வர் வருகை?

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள‌ எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் ஆலோசனையின்படி நேற்று தலைமை செயலகம் சென்று தனது பணிகளைத் தொடங்கினார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தனது அமைச்சரவை சகாக்களுடன் இன்று சந்தித்து ஆசிர்வாதம் பெற திட்டமிட்டுள்ளதாக தக‌வல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் பெங்களூரு சிறைக்கு வரவிருப்பதால் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி இது தொடர்பாக முறையாக அனுமதி கேட்டு கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.