Breaking News
வறட்சி எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம்  மூடல்?

கடும் வறட்சி காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம் மார்ச் 1-ஆம் தேதி முதல் மூடப்படும் எனக் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை மட்டுமன்றி வடகிழக்குப் பருவ மழையும் சராசரி அளவுக்கு கூட பெய்யாததால் அதன் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் சராசரி அளவில் 42 சதவீதம் மட்டுமே மழைப் பொழிவு இருந்ததால் பெரும்பாலான நீராதாரங்கள் வறண்டுள்ளன. இதனால், கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தைப் பொருத்தமட்டில் தென்மேற்குப் பருவ மழையைவிட வடகிழக்குப் பருவ மழைதான் பிரதானமாகும். தென்மேற்குப் பருவ மழை தமிழக – கேரள எல்லையையொட்டி உள்ள கூடலூர் பகுதிகளில் பெய்தாலும் ஏனைய பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழைதான் பிரதானமாகும். ஆனால், கடந்த ஆண்டில் இரண்டு பருவ மழையுமே பொய்த்ததால் முதுமலை புலிகள் காப்பகப் பகுதியே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் பிரதான நீராதாரமான மாயாறு ஆற்றில் நீர் வரத்து வெகுவாகக் குறைந்ததால் உதகையிலுள்ள காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த ஒரு வாரமாக மாயாறு ஆற்றுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், அந்த தண்ணீரும் வன விலங்குகளின் தண்ணீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை.
இதனிடையே, தற்போது வனத் தீயும் பெரும் பிரச்னையாகி வருகிறது. கடந்த வாரத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் அமைந்துள்ள மூன்று குன்றுகள் முழுமையாக தீக்கிரையாகிவிட்டன. இவற்றிலிருந்த அரிய வகை தாவரங்களும், மூலிகைச் செடிகளும் மட்டுமின்றி ஊர்வன, பறப்பன உள்ளிட்ட சிறிய விலங்குகளும் பலியாகிவிட்டன. வனத்துக்குள் தீ ஏற்பட்டால் எதிர் தீ கொண்டு அணைப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில் இப்பகுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக வனத் தீ ஏற்பட்டாலும் அதை உடனுக்குடன் கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது.இந்நிலையில், உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகும் நிலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த 3 யானைகளுமே உணவுப் பற்றாக்குறையால் உயிரிழந்திருக்கவே வாய்ப்பிருந்ததாக மருத்துவக் குழுவினரும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உணவும், குடிநீரும் இல்லாததோடு வனத் தீயால் ஏற்படும் பிரச்னைகளாலும் வன விலங்குகள் வனத்தைவிட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றன.
அத்துடன் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பொக்காபுரம் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழா நிகழ்ச்சிகள் மார்ச் 3ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்ற சூழலில், செயற்கையாகவும் காப்பகப் பகுதிகளில் வனத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதோடு, சாலையோரங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
எனவே, முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் தற்போது நிலவும் வறட்சி, வெப்பம், உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை, வனத் தீ, வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் மீண்டும் பசுமை திரும்பும் வரை காப்பகத்தை மூட அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் எனவும், மார்ச் 1-ஆம் தேதி முதல் புலிகள் காப்பகத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு வனத் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க தொட்டலிங்கி, சொக்கநள்ளி, வாழைத் தோட்டம், பூதநத்தம் ஆகிய 4 பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள், தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கவும், குடிநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.