ஐ.நா.வில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – இலங்கை அரசுக்கு தமிழர் அமைப்பு கோரிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு நீதி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இலங்கை அரசு உறுதியளித்திருந்தது. மேலும், இலங்கையில் வாழும் மொழி, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் சுமந்திரன், கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,” இலங்கை அரசு வாக்குறுதிகள் அளித்து, 18 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. போரில் மாயமான நபர்களை கண்டறிவதற்காக, தனி அலுவலகம் அமைப்பது தொடர்பான சட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கை அரசின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியவை. அதில் எந்த மாற்றமும் இல்லை.” எனக் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 34-ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.