சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வீரர் அங்குள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞரான தன்வீர் ஹீசைன் என்பவர் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சாரனாக் லேக் பகுதி போலீஸ் கேசி ரியர்டன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேசி கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை அதிரோன்டக் மலைப்பகுதியில் வைத்து தன்வீர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தன்வீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 5,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி தன்வீர் ஜெயிலில் இருந்து பெயில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தன்வீருக்கு எந்த சம்பந்தமும் இல்லை, அவர் குற்றவாளி அல்ல என்று தன்வீரின் வழக்கறிஞர் பிரெயின் பேரட் தெரிவித்துள்ளார்.