நெடுவாசலில் மாட்டு வண்டிகளில் வந்து போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு
புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் எரிவாயு எடுக்கத் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி 15-வது நாளாக நேற்று நடை பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பொருட்களுடன் மாட்டு வண்டிகளில் வந்து கலந்து கொண்டனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கத் தடை விதிக்க வேண்டு மென பிப்.16-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
15-வது நாளாக நேற்று நடை பெற்ற போராட்டத்தில் புள்ளான் விடுதி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக் கணக்கானோர் அங்கிருந்து 9-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி, வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். அப்போது உழவுக் கலப்பை, மண்வெட்டிகளை சுமந்து வந்த விவசாயிகள் சிலர் தங்களின் உடலில் சேறு பூசிக்கொண்டு வந் திருந்தனர்.
தோட்டத்தில் விளைந்த கரும்பு, கடலை, தேங்காய், மாங்காய், பலாப்பழம், வாழைத்தார், சுரைக் காய், கத்தரிக்காய், மலர்கள், மரக்கன்றுகளையும் எடுத்துக் கொண்டு பெண்கள் வந்திருந்தனர்.
போராட்டத்தில் பேசிய அவர்கள், “எங்கள் தோட்டங்களில் விளைந்துள்ள வேளாண் விளை பொருட்களை எல்லாம் இந்த எரிவாயு திட்டத்தின் மூலம் நாசம் செய்துவிடாதீர்கள்” என்று கோரிக்கை விடுத்தனர்.