Breaking News
எது நேர்ந்தாலும் ஒற்றுமையோடு எதிர்கொள்வோம்: தனுஷ் சகோதரியின் உருக்கமான பதிவு

பாடகி சுசித்ரா பகிர்ந்ததாக கூறப்படும் ட்வீட்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஒருபுறம் எங்கள் மகன் என உரிமைகோரி மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கு மறுபுறம் என சிக்கல்களில் இருக்கிறார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில் அவரது சகோதரி விமலா கீதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது சகோதரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்திருக்கிறார்.

அந்த நிலைத்தகவலை பகிர்ந்த பின்னர் தனது சமூக வலைத்தள கணக்குகளை டீ ஆக்டிவேட் செய்தார் விமலா கீதா.

அவர் பதிந்திருந்த நிலைத்தகவல் வருமாறு:

கடந்த சில மாதங்களாகவே எங்கள் குடும்பம் மிகுந்த வலிகளுக்கும் வேதனைகளுக்கும் இடையே சுழன்று கொண்டிருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளின் அழுத்தத்தால் நாங்கள் மவுனமாக இருந்து வருகிறோம்.

எங்கள் குடும்பம் ஏழ்மையில் சிக்கியிருந்தபோது ஒரே ஒரு நபரின் கடின உழைப்பும் தியாகமும் எங்களுக்கு உண்ண உணவு, கல்வியறிவு என அனைத்தையும் பெற்றுத் தந்தது.

தேனியின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த நாங்கள் இன்றைக்கு பெற்றிருக்கும் இந்த வாழ்வு ஒரே இரவில் கிடைக்கப்பெற்றதோ எவ்வித தியாகமும் செய்யாமல் எளிதாக கிடைக்கப்பெற்றதோ அல்ல. இந்த உயரத்தை அடைவதற்காக என் சகோதரர்கள் எண்ணற்ற ஏளனங்களையும் தர்சங்கடமான சூழ்நிலைகளையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கின்றனர்.

எங்களுக்கு எந்த மாதிரியான ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டன, எந்த மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம் என்பதை இறைவன் அறிவார்.

தனுஷ் மிகப்பெரிய நட்சத்திரம். கடின உழைப்பின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், வெற்றிவாய்ப்புகள் வரும்போது சில சிக்கல்களும் வரத்தான் செய்கிறது. பழிவாங்கும் படலங்களும் நடைபெறுகின்றன.

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளும், கதைகளும் உருவாவது இயல்பானதாகவே இருக்கிறது. இருப்பினும், தமிழக மக்களை ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்விக்கும் ஒரு நடிகருக்கு இத்தகைய துயரத்தை தருவது தகுமோ?

இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர் தளம் என்பது எதை வேண்டுமானாலும் தெரிவிக்கும் ஒரு இடமாக இருக்கிறது. 12 வயது குழந்தைகூட இருக்கும் ஒரு தளத்தில் இத்தகைய போலியான ஆபாச வீடியோக்களை சிலர் பகிர்வதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், சிலர் அத்தகைய வீடியோக்களை பார்ப்பதிலும் பகிர்வதிலும் காட்டும் ஆர்வம். எங்கள் குடும்பத்தினர் நிறைய இன்னல்களை சந்தித்துவிட்டோம். எதுவந்தாலும் ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம்.

மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்துக்கும் இடையே முகநூலில் இருந்தும் ட்விட்டரில் இருந்தும் நான் சில காலம் விலகி நிற்கிறேன். இவற்றையெல்லாம் செய்வது யாராக இருந்தாலும்.. நிறுத்திக்கொள்ளுங்கள்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு யாராவது சென்றுவிட்டால் அவர்களை மீட்க முடியாது. குறிப்பாக பெண்கள் அத்தகைய முடிவெடுத்தால் செய்வதற்கு ஒன்றுமில்லை. வாழுங்கள் வாழ விடுங்கள். சிறிது காலத்துக்கு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.