பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: மத்திய பிரதேச அரசு முடிவு
மத்திய பிரதேசத்தில் வருகிற மழைக்கால கூட்டத் தொடரில், பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த மழைக்கால சட்ட பேரவை கூட்டத் தொடரில் பலாத்கார குற்றங்களை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைக்கு பதிலாக மரண தண்டனை வழங்கு இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். உத்தரபிரதேசத்தில் உள்ளதை போல ரோடு சைட் ரோமியோக்கள், ஈவ் டீசிங் செய்பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட உள்ளது. பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு போலீசார் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மத்திய பிரதேசம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 12 பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அரசின் புள்ளி விவரங்களின்படி 2016 பிப்ரவரி 1 முதல் 2017 பிப்ரவரி வரையிலான கால கட்டத்தில் 4 ஆயிரத்து 279 பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர். 248 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2260 பேர் சிறுமிகள் என்பது வேதனை அளிக்கும் விஷயமாகும். என்று தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்களின்படி 2015ல் நாட்டிலேயே அதிக பட்ச அளவாக 4391 பேர் மத்திய பிரதேசத்தில் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.