Breaking News
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்!

மிளகு தி கிரேட்

‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’என்பது பிரபலமான பழமொழி. அப்படி என்ன மிளகுக்கு சிறப்பு இருக்கிறது?
ஆயுர்வேத சிறப்பு மருத்துவர் மகாதேவன் பதிலளிக்கிறார்.

‘‘உணவில் நச்சுத்தன்மை இருந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கொண்டது மிளகு. இதனால்தான் ‘பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என நம் முன்னோர் தைரியம் கொடுத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் விஷ மாற்று மருந்துகளில்முக்கியமானதாக மிளகு இருக்கிறது.

மருந்துகளின் நல்ல சக்தி அதிகமாகவும், கொடுக்கப்படும் மருந்துகளால் நோயாளியின் உடல் பக்கவிளைவால் பாதிக்கப்படாமல் இருக்கவும் மிளகை ஆயுர்வேத மருத்துவர்கள் சேர்க்கிறார்கள். இது மட்டுமல்ல… இன்னும் எத்தனையோ சிறப்புகள் அந்த சின்னஞ்சிறிய மிளகில் இருக்கிறது.’’ கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…

‘‘மிளகை மிகச் சிறந்த இரைப்பை குடலியல் சிறப்பு மருத்துவர் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரைப்பை, குடல் தொடர்பான பல்வேறு கோளாறுகளைப் போக்க வல்லது மிளகு. மிளகினால் உமிழ்நீர் அதிகம் பெருகுவதால் செரிமானம் மேம்படும், சுவை உணர்வு அதிகமாகும், பசி உணர்வு தூண்டப்படும். குடல், கல்லீரல் போன்ற உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்கும்.

சாம்பார் பொடி, ரசப்பொடி போன்ற துணை உணவுப் பொருட்களின் கூட்டில் மிளகை நம்மவர்கள் சேர்த்துக் கொள்ளும் ரகசியம் இதுதான். இவற்றுடன் சளியை அகற்றுவதற்கும் மிளகு பயன்படுகிறது. இதனால்தான் மிளகு சூப், பெப்பர் டீ என மிளகு கலந்து பலர்
சாப்பிடுகிறார்கள்.’’

மிளகை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
‘‘இட்லி, தோசைக்கு மிளகு பொடி செய்து தொட்டுக் கொள்ளலாம். மிளகைப் பொடித்து நெய்விட்டு பிசைந்து ஒரு கவளம் சாப்பிடலாம். இதேபோல் சாதத்தில் போட்டுப் பிசறி நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர ஜீரண கோளாறுகள் நீங்கும். மிளகை ரசமாக வைத்து சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கிராம் மிளகுப் பொடியை தேனில் கலந்து இருவேளை உண்ணலாம்.

சீரகமும் மிளகும், உப்பும் சேர்த்து பொடித்துச் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் அஜீரணத் தொல்லை நீங்கும். வயிற்றில் ஜீரணமில்லாத போக்கு
இருக்கும்போது மிளகை நல்லெண்ணெயில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். மிளகையும், வால்மிளகையும் நெய்யில் பொரித்து சாப்பிட இருமல் குறையும், மிளகையும், துளசியையும் கடித்து மென்று சாப்பிடக் குளிருடன் வரும் காய்ச்சல் நிற்கும். உடலில் வரும் பல அலர்ஜி
தடிப்புகளுக்கு ஆயுர்வேதமருத்துவர் ஆலோசனையின்படி மிளகை சாப்பிட்டு வரலாம். இதனால் பித்தம் சீரடைந்து தடிப்பு
குறைந்துவிடும்.

மிளகை தூள் செய்து தேனில் நன்கு குழப்பி நடுவிரலில் துவைத்து தொண்டையினுள் தடவ உள்நாக்குத் தொங்குதல் குறையும். அதனால் ஏற்படும் இருமல் தொண்டை கரகரப்பு குறையும். பசுவின் பாலில் மிளகை ஊற வைத்து அரைத்து கலக்கி சாப்பிட்டுவர நீர்த்துவார வலி குறையும். பல் வலி குறைய இதன் தூளும் தைலமும் சிறந்தது. தொண்டை வறண்டோ, வெந்தோ, அடைபட்டோ, குரல் கம்மிவந்தபோதோ, நல்ல நெய்யில் பொரித்த வால் மிளகுடன் திராட்சை பனங்கற்கண்டு, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், வாதுமைப் பருப்பு இவைகளைச் சேர்த்து மாத்திரை செய்து அரைத்து பயன்படுத்துவது உண்டு.’’

வேறு எப்படி மிளகைப் பயன்படுத்தலாம்?
‘‘மிளகு தூள், வெங்காயம், உப்பு இம்மூன்றையும் அரைத்துத் தலையில் புழு வெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும். மிளகு 25 கிராம், சோம்பு 50 கிராம் இரண்டையும் தூள் செய்து வெல்லம்150 கிராம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை சாப்பிட்டு வர வயதானவர்களுக்கும், இளைத்தவர்களுக்கும் ஏற்படும் ஆசனவாய் வலி குணமாகும்.

மூக்குச்சதை அடைப்பு, கட்டிச்சளி, அடைப்பு, முன் மண்டை, உடல் வெக்கை, நீர்க்கோர்வை, தலைவலி இவைகளுக்கு ஊசி முனையில் மிளகைக் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி சுவாசித்தால் அடைப்பு நீங்கும்.வலியும் குறையும். வெள்ளை மிளகை பால் விட்டரைத்துச் சுடவைத்து சிலர் தலையில் தேய்த்துக் கொள்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாதவர் கடும் நோய்வாய்ப்பட்டு எழுந்தவர்,
எண்ணெய் ஒத்துக்கொள்ளாதவர் இவ்விதம் பால்மிளகு தேய்த்து குளிக்கலாம். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

இதேபோல பன்னீரில் அரைத்துத் தலையில் மெலிதாகப் பற்றுப் போட தலையின் வேதனை குறையும். வாய் நாற்றம், எகிறு வீக்கம் இவைகளில் வால்மிளகுத்தூள் சேர்த்த பற்பொடிநல்ல பலன் தரும். உடலில் வாத கபங்களினால் வரும் நோயை மாற்றுவதற்கு மிளகு பயன்படுகிறது.
நல்ல மிளகு 6, தர்ப்பைப் புல் ஒரு பிடி, சீரகம் – 2 சிட்டிகை இவற்றை மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு பாலில் சாப்பிட எல்லா விஷமும் முறியும்.’’

மிளகை யார் பயன்படுத்தக் கூடாது?
‘‘வயிற்றில் குடற்புண்(அல்சர்) உள்ளவர்கள், அதிக ரத்தக் கொதிப்பு கொண்டவர்கள், ரத்தம் உறையும் தன்மையைத் தடுக்கும் மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மிளகைத் தவிர்ப்பது நல்லது.’’

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.