லாரிகள் ஓடாததால் ரூ.500 கோடி இழப்பு
ஐந்து நாட்களாக தொடர்ந்த, லாரி, ‘ஸ்டிரைக்’ காரணமாக, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் சி.பாபு கூறியதாவது: லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், ஜவுளி, பம்புகள் மற்றும் இதர மோட்டார்கள் போன்ற உற்பத்தி பொருட்களை அனுப்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், வருவாய் பெரிதும் குறைந்து, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. சரக்குகளை தாமதமாக அனுப்புவதால், மறுமுனையில் இருப்போர், எங்களுக்கு தர வேண்டிய தொகையில், பிடித்தம் செய்து விட்டனர். அவர்களிடம், அடுத்த கொள்முதல் ஆணை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் காலங்களில், இதுபோன்ற வேலை நிறுத்தங்களை தடுப்பதற்கு, அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால், பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.