Breaking News
தி.நகரில் பரபரப்பு: தீபா-மாதவன் குடுமிப்பிடி சண்டை ஆதரவாளர்களிடையே அடிதடி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். அதிமுகவில் சசிகலாவை பிடிக்காதவர்கள், தீபாவை தேடிச் சென்றனர். இதனால் உற்சாகம் அடைந்த தீபா, அரசியலில் கால்பதித்து அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று எண்ணினார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை தீபா தொடங்கினார். தன் வீட்டில் வேலை பார்க்கும் கார் டிரைவர் ஏ.வி.ராஜாவை பேரவை செயலாளராகவும், அவர் மனைவியை தலைவராகவும் தீபா நியமித்தார். இதனால் கொதிப்படைந்த ஆதரவாளர்கள் தீபா இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நிலவியது.தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி வழங்கும்படி மாதவன் தீபாவுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் இருவரும் விவாகரத்துக்கு செல்லும் அளவுக்கு சண்டை முற்றியது. ஒருகட்டத்தில் தீபாவை விட்டு மாதவன் பிரிந்து சென்றார். தனக்கு வேண்டியவர்களிடம், பேரவையில் பதவி வாங்கித்தருவதாக மாதவன் பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தீபா அறிவித்தார். யாரும் எதிர்பாராத வகையில் வேட்புமனுவில் கணவர் பெயரை குறிப்பிடாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கணவரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் மாதவனை வெறுத்தார் என பரபரப்பாக பேசப்பட்டது. மாதவன் பிரிந்து சென்றதும், ஏவி.ராஜா தான் தீபாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். அதன்படி, தீபா எங்கு சென்றாலும் அவருடன் ஏ.வி.ராஜா செல்வார். மாதவன் தீபாவை பிரிந்து செல்ல இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. சொந்த கணவரை ஓரம்கட்டிவிட்டு இப்படி கார் டிரைவரை பக்கத்தில் வைத்துள்ளாரே என ஆதரவாளர்களும் முணுமுணுக்க தொடங்கினர். இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை திடீரென மாதவன் மீண்டும் தீபாவை தேடி அவர் இல்லத்துக்கு வந்தார். ஆனால் முதலில் அவரை தீபா கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் மாதவன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இந்த நிலையில், இன்று மாதவன் தீபாவை பார்ப்பதற்காக மீண்டும் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள இல்லத்துக்கு சென்றார். ஆனால், கேட்டில் இருந்த செக்யூரிட்டிகள் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாதவன், காரை விட்டு இறங்கி சத்தம் போட்டார். இருப்பினும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மாதவனுடன் வந்த பெண்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் செக்யூரிட்டிகள் மற்றும் தீபா தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே தீபா மற்றும் ஏ.வி.ராஜா, எதுவும் தெரியாதது போல் இருந்தனர். கடும் வாக்குவாதத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. பின்னர், தீபாவின் நண்பர்கள், தம்பதியினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சமாதானத்தை தீபா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குள், வீட்டிற்கு வெளியில் இருந்த இருதரப்பினரின் ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. தண்ணீர் பாட்டில்கள், கற்கள் என கையில் கிடைத்ததை கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனாலும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாதவன் தரப்பினர் ஏவி.ராஜாவை பார்த்து, ‘‘எல்லா பிரச்னைக்கும் நீ தான் காரணம், தீபாவை கைக்குள்ளேயே போட்டுக்கொண்டு இந்த ஆட்டம் போடுகிறாய்’’ என ஆவேசமாக பேசினர். பதிலுக்கு ஏ.வி.ராஜா தரப்பினரும் வாக்குவாதம் செய்தனர். ஒருக்கட்டத்தில் அனைவரையும் சமாதானப்படுத்தி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தீபா-மாதவன் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் மாதவன் ஆதரவாளர்கள் வீட்டின் அருகில் கூடி நின்றி, தீபா ஒழிக, தீபா ஒழிக என கோஷமிட்டு கொண்டு இருப்பதால் அங்கு தொடர்ந்து பரபரப்பு காணப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.