Breaking News
காதலிக்க ஆசை! சுபிக்‌ஷா ரெடி.. நீங்க ரெடியா?

பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில், ஹீரோ லக்ஷ்மன் ஜோடியாக அறிமுகமானவர் சுபிக்‌ஷா. தொடர்ந்து விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ, எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கிய கடுகு படங்களில் நடித்தார். சென்னைக்கு வந்திருந்த அவரை, சத்யம் தியேட்டரில் சந்தித்துப் பேசினோம்.

சினிமாவுக்கு வந்த கதையை சுருக்கமா சொல்லுங்க சுபி?

ஐ… சுபி-ன்னு செல்லமா கூப்பிடறதே நல்லாருக்கே. அப்பா கிருஷ்ணனுக்கு பாலக்காடு. பெல்லாரியில் குடியேறினார். அம்மா பத்மா, கிளாசிக்கல் டான்ஸ் டீச்சர். அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு, பெற்றோர் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நான் ஒரே ஒரு செல்லக்குட்டி. அபிநயாவா இருந்த நான், சினிமாவுக்கு வந்த பிறகு சுபிக்‌ஷா ஆனேன். பெல்லாரியில் படிச்சு முடிச்சேன். பிறகு நிறைய விளம்பரப் படங்கள்ல நடிச்சேன். நகை, ஜவுளி, சமையல் பொருளுக்கான விளம்பரங்கள்ல நடிச்ச என் போட்டோக்களைப் பார்த்த பாரதிராஜா சார், அன்னக்கொடி படத்தோட ஆடிஷனுக்கு வரவழைச்சார். பிறகு என்னை லக்ஷ்மன் ஜோடியா நடிக்க செலக்ட் பண்ணினார். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்னு சொல்வாங்க. என் அறிமுகமே பாரதிராஜாங்கிற ஜாம்பவான் என்பதால், கோலிவுட்ல விலாசம் கிடைச்சது. அதுக்குப் பிறகு விக்ரமன் டைரக்‌ஷன்ல நினைத்தது யாரோ படத்துல நடிச்சேன். இப்ப பரத் ஜோடியா நடிச்ச கடுகு ரிலீசாகி, நல்லபடியா ஓடிக்கிட்டிருக்கு.

பாரதிராஜாவோட அறிமுகமா இருந்தாலும், கோலிவுட்ல பெரிய லெவலுக்கு வர முடியலையே?

அதுக்கு நான் காரணம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேரம் வரும். அப்ப இந்த மாதிரி கேள்வி வராது. தமிழ்ல நடிச்சுக்கிட்டே மற்ற மொழிகள்லயும் நடிச்சேன். ஸோ, அதனால்கூட தமிழ்ல சின்ன இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். இப்ப நான் தமிழ், மலையாளம், கன்னடப் படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கேன்.

தமிழ்ல என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?

பாலாஜி சக்திவேல் டைரக்‌ஷன்ல, டைரக்டர் லிங்குசாமியோட சொந்தக்காரர் மதி ஹீரோவா அறிமுகமாகும் ரா ரா ராஜசேகர் படத்துல, திண்டுக்கல்லைச் சேர்ந்த மாடர்ன் ஹீரோயினா நடிக்கிறேன். ஏ.வெங்கடேஷ் டைரக்‌ஷன்ல, விநய் ஜோடியா நேத்ரா படத்துல நடிக்கிறேன். டைட்டில் ரோல் எனக்கு. காரைக்குடி பெண்ணா வர்றேன். சமீபத்துல இந்தப் படத்துக்காக கனடாவுக்கு போயிட்டு வந்தது மறக்க முடியாத நல்ல அனுபவம். தவிர, ரீங்கார ஓசை படத்துலயும் நடிக்கிறேன். இதுல நவீன் ஹீரோ. படத்தோட புரொடியூசரும் அவர்தான். ஏ.ஆர்.முருகதாஸ் அசோசியேட் அசோகன் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்றேன். இதுலயும் எனக்கு அசத்தலான ரோல் கிடைச்சிருக்கு.

இங்கிலீஷ் படத்துலயும் நடிச்சிருக்கீங்களாமே?

அதுபற்றி சொல்லுங்க!ஆமாம். டிராயிங் ப்ளட்ஸ் என்ற இங்கிலீஷ் படத்துல நடிச்சிருக்கேன். இதுல நான், எல்லாரும் வழக்கமா பேசற இங்கிலீஷ்ல டயலாக் பேசி நடிச்சிருப்பேன். இது அவார்டுக்காக உருவான படம்.

வாய்ஸ் நல்லா இருக்கு. சினிமாவுல பாடுவீங்களா?

அட, இந்த விஷயத்தை இதுவரைக்கும் நான் கூட யோசிச்சதில்ல. நீங்க யோசிச்சிருக்கீங்கன்னா, நல்ல வாய்ப்பு கிடைச்சா பாடிட வேண்டியதுதான். அடிப்படையில நான் ஒரு டான்சர். பரத நாட்டியத்துல ரொம்ப ஈடுபாடு உண்டு. தமிழ்ல சரளமா பேசுவேன். இப்ப நடிச்ச ரா ரா ராஜசேகர் படத்துல நான்தான் டப்பிங் பேசியிருக்கேன்.

ஆக்டிங் சைடுல, யாரை இன்ஸ்பிரேஷனா நினைக்கறீங்க?

யார் நடிச்ச படமா இருந்தாலும் பார்ப்பேன். அவங்க நடிப்புல இருந்து என்ன கத்துக்கலாம்னு யோசிப்பேன். ஹீரோயின்கள்ல, ஜோதிகாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். மலையாளத்துல மணிச்சித்திரத்தாழ் படத்துல ஷோபனா பண்ணியிருந்த கேரக்டர் மாதிரி, முழுநீள கிளாசிக்கல் டான்சரா நடிக்க ஆசைப்படறேன். இதனோட தமிழ் ரீமேக் சந்திரமுகியில ஜோதிகா சிறப்பா நடிச்சிருந்தார். எனக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு கேட்டா, ஜோதிகாவைத்தான் சொல்வேன்.

நல்ல கேரக்டர் கிடைச்சா, மொட்டை போட்டுக்கிட்டு நடிப்பீங்களா?

அப்படி மொட்டை போட்டுக்கிட்டு நடிச்சா தேசிய விருது கிடைக்கும்னு நம்பிக்கை ஏற்பட்டா, தாராளமா மொட்டை போடுவேன். சம்பளம் எல்லாம் அடுத்தபட்சம். ஏதாவது வித்தியாசமா நடிக்கணும்னு பில்டப் பண்ணி கேட்டா மறுத்துடுவேன். ஒரு படத்துல என்னை வில்லியா நடிக்க கேட்டாங்க. ஆனா, அந்தக் கேரக்டருக்கு என் முகம் பொருத்தமா இருக்காதுன்னு சொல்லி மறுத்துட்டேன்.

பிகினி டிரெஸ்ல வந்து, இளம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவீங்களா?

ஹலோ, என்னைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது? இப்படி எல்லாம் கேள்வி கேட்கறீங்க! பிகினி டிரெஸ், நீச்சல் உடை, அப்படி இப்படின்னு ஆரம்பிச்சேன்னு வெச்சுக்குங்க, பேரன்ட்ஸ் என்னை பின்னியெடுத்துடுவாங்க. அதுக்கெல்லாம் என் வீட்ல அனுமதி கிடையாது. நடிக்க அனுமதிச்சதே பெரிய விஷயம். இதுல பிகினி, நீச்சல் உடைன்னு ஆரம்பிச்சா, அதுக்குப் பிறகு என்ன நடக்கும்னே தெரியாது.

எல்லா ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரி ஹோம்லி கேரக்டர்கள்லதான் நடிப்பேன். கிளாமரா நடிக்கிறதுக்குன்னே நிறைய ஹீரோயின்கள் இருக்காங்க. குடும்பப்பாங்கா நடிக்க திவ்யா, கீர்த்தி சுரேஷ் மாதிரி ஏதோ ஒண்ணு ரெண்டு பேர்தான் இருக்காங்க. அந்த வரிசையில நான் சேர்ந்தா போதும்னு நினைக்கிறேன்.

சரிங்க. ரொம்ப சின்னப் பொண்ணு. அழகா வேற இருக்கீங்க. இந்நேரம் லவ் வந்திருக்கணுமே?

அதானே பார்த்தேன், என்னடா இந்தக் கேள்வியை இதுவரைக்கும் கேட்காம இருக்கீங்களே, ஒருவேளை நல்ல மனுஷனா திருந்திட்டீங்களோன்னு நினைச்சேன். கடைசியில அரைச்ச மாவையே மறுபடியும் அரைக்க வந்திட்டீங்க. ஸ்கூல்ல படிக்கிறப்ப, சிலபேர் என்கிட்ட தைரியமா வந்து, ஐ லவ் யூ சொல்லியிருக்காங்க. ஆனா, அவங்க வேண்டுகோளை நான் ஏத்துக்கல. சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, நண்பர்கள் சைடுல இருந்து ஒண்ணு ரெண்டு பேர் புரப்போஸ் பண்ணாங்க. அதையும் நான் ஏத்துக்கல. இதுக்கெல்லாம் காரணம், இப்ப எனக்கு காதலிக்கிற வயசு இல்ல. கவனம் முழுக்க நடிப்புல மட்டும்தான் இருக்கு. ஆனா, வருங்காலத்துல காதலிக்க ஆசையிருக்கு. அப்படி யாரையாவது நான் காதலிச்சா, அந்த மாப்பிள்ளையை, என் அப்பா, அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணுவேன். கண்டிப்பா அவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். ஏன்னா, அவங்க ரெண்டுபேரும் லவ் மேரேஜ் பண்ணவங்க. எப்பூடி நம்ம கணக்கு?

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.