Breaking News
தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்டமாக 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை கடந்த 2ம் தேதி அன்று கொடுக்கப்பட்டது. 2வது தவணையாக இன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். அதன்படி, தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.