Breaking News
தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம்: இரு அணிகளும் இணையுமா?

தமிழகம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதால், அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் வரும் மே 5-ம் தேதி தொண்டர்களைச் சந்தித்து, தன் சுற்றுப்பயணத்தைத் துவங்குகிறார் ஓபிஎஸ். அவரின் சுற்றுப் பயணம் சுமார் 1 மாதம் வரை நீடிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுப் பயணம் ஏன்?

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானப் புரட்சியை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக, எம்ஜிஆர் பாணியில் நீதிகேட்டு மக்களை சந்திக்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அத்துடன் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிதாகும் என்று கூறப்படுகிறது.

முதல்வர் கருத்தின் எதிரொலியா?

முன்னதாக சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சந்தர்ப்பவாதிகள் ஏதாவது சொல்லி ஆட்சியை முடக்கப் பார்க்கின்றனர். இதற்குத் தக்க பாடம் புகட்டுவோம். கட்சியும் ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது. 90% தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர். எனவே, பிரிந்து சென்றவர்கள் இணைந்தாலும் பரவாயில்லை; இணையாவிட்டாலும் பரவாயில்லை.

கட்சியின் 50 மாவட்டங்களில் 48 மாவட்டச் செயலாளர்கள் நம்மிடத்தில்தான் உள்ளனர். 123 எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர். பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் பொதுக்குழு உறுப்பினர்கள் 2127 பேரில் 2025 பேர் நம்மிடம் உள்ளனர். ஆட்சியும் கட்சியும் நம்மிடம் உள்ளது.

நமது குறிக்கோள் திமுகவை வீழ்த்த வேண்டும். இதற்கு ஒற்றுமையோடு ஒருமனதாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் சுற்றுப்பயணம் திட்டம் வகுத்துள்ளார். இணைந்தாலும் பரவாயில்லை இணையாவிட்டாலும் பரவாயில்லை என்ற எடப்பாடி தரப்பு கருத்தும் ஓபிஎஸ் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.