அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய நடவடிக்கை புதிய வரைவு விதிகள் இன்று வெளியிடப்படும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஐகோர்ட்டில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து’ கடந்த ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி உத்தரவிட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20–ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22(ஏ)–ல் திருத்தம் செய்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை இனி பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும், அதேநேரம் கடந்த ஆண்டு அக்டோபர் 20–ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
மறு விற்பனைக்கு அனுமதி
ஆனால், இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்கவில்லை. தமிழகத்தில் உள்ள நிலங்களை வகைப்படுத்தியும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்தும் ஒரு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை தமிழக அரசு வரையறை செய்யவில்லை.
இந்தநிலையில், இந்த வழக்கு கடந்த மார்ச் 28–ந் தேதி விசாரணைக்கு வந்த போது ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர், கடந்த ஆண்டு அக்டோபர் 20–ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக் கொள்வதாகவும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்கள். அதேநேரம், இவை அனைத்தும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் தடை
இதன் பின்னர் இந்த வழக்கு கடந்த மாதம் 21–ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி இந்த ஐகோர்ட்டு தடைவிதித்தது. ஆனால், அந்த தடை காலத்தில், தடையை மீறி சார் பதிவாளர்கள் பலர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்து உள்ளனர். அந்த விவரங்களை பத்திர பதிவுத்துறை ஐ.ஜி. அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை மே மாதம் கோடை விடுமுறையில் விசாரித்து, தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறி இருந்தனர்.
அறிக்கை இன்று தாக்கல்
இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை ஆஜராகி, ‘‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்து புதிய வரைவு விதிகளை கொண்ட திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது. புதிய வரைவு விதிகளுக்கு கடந்த 2–ந் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இதைத் தொடர்ந்து மே 5–ந் தேதி (இன்று) புதிய வரைவு விதிகளையும், அது தொடர்பான அரசாணையும் தமிழக அரசு வெளியிடுகிறது. எனவே, புதிய வரைவு விதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெள்ளிக்கிழமை (இன்று) இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்’’ என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். அதேநேரம், அந்த ஆவணங்கள் அனைத்தையும், மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தடையை மீறி பத்திரப்பதிவு
அதன் பிறகு, ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர் பலர் பத்திரப்பதிவு செய்துள்ளதாக, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. ஹன்ஸ்ராஜ் வர்மா அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகம் முழுவதும் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. செப்டம்பர் 9–ந் தேதி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர்கள் பலர் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 9 பத்திரப்பதிவு மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு டி.ஐ.ஜி. உள்ளனர். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் மண்டல வாரியாக எத்தனை பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது? என்ற அறிக்கையை 9 டி.ஐ.ஜி.க்களும் அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, சென்னை மண்டலத்தில் 1,412, வேலூர் மண்டலத்தில் 2,581, கடலூர் மண்டலத்தில் 490, திருச்சி மண்டலத்தில் 250, சேலம் மண்டலத்தில் 1,534, மதுரை மண்டலத்தில் 2,434, கோவை மண்டலத்தில் 207, தஞ்சாவூர் மண்டலத்தில் 456, திருநெல்வேலி மண்டலத்தில் 396 என்று மொத்தம் 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தடை நீட்டிப்பு
இந்த அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர்.
அதன்பிறகு, பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து மேனன் என்பவர் தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர்.
பின்னர் இந்த வழக்கையும் மே 12–ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.