ஒடிசா மாநிலத்தில் அக்னி -2 ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிசாவில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி -2 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் வல்லமை படைத்த இந்த ஏவுகணையின் நீளம் 20 மீட்டர். மொத்த எடை 17 டன். கூடுதலாக 1,000 கிலோ எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது.
ஒடிசாவின் தமாரா பகுதியில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவில் நேற்று இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் நவீனமயமாக்கப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி சீறிப்பாய்ந்து இலக்கைத் தாக்கியது.
இடைத்தர தூர ஏவுகணை வகையைச் சேர்ந்த அக்னி 2, 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, இலக்கைத் தாக்கி அழிக்கக்கூடியது. அக்னி ஏவுகணை வரிசையில் இதுவரை அக்னி- 6 (8 ஆயிரம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும்) ரகம் வரை உருவாக்கப்பட்டு வருகிறது. இது சோதனை அளவிலேயே உள்ளது.
அக்னி 1, அக்னி 2 மற்றும் அக்னி 3 ஆகிய ஏவுகணைகள் ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.