மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை கண்டு தமிழக மாணவர்கள் ஏன் அச்சப்படுகின்றனர்? ஐகோர்ட்டு கேள்வி
சென்னை ஐகோர்ட்டில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ‘எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு வருகிற 7–ந் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிவு ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. ‘நீட்’ தேர்வு தொடர்பாக கடந்த 2010–ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், ‘நீட்’ நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை திருத்த வேண்டும். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ்–2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.
‘நீட் தேர்வினை கண்டு தமிழக மாணவர்கள் ஏன் அச்சப்படுகின்றனர்?, தமிழகத்தில் பாடத்திட்டங்கள் தரம் குறைந்ததாக உள்ளதா? மற்ற மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை எதிர்க்காதபோது, ஏன் தமிழகம் எதிர்க்கிறது? தரம் குறைந்த பி.எட்., கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் புற்றீசல் போல் பெருகிவிட்டது. அங்கு தரம் இல்லாத ஆசிரியர்களை உருவாக்குகின்றனர். அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது’ என்று நீதிபதிகள் கூறினார்கள்.
பின்னர், இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.