தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.
தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.
மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.